முடியுடை மூவேந்தர் எனப்படும் சேர சோழ பாண்டியர் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட மிகப் புகழ் பெற்ற வேளிர் குலத் தலைவனும் பறம்பு மலை மன்னனுமான பாரியின் கதையை உள்ளடக்கமாகக் கொண்ட நாடகம் இது. வள்ளல் தன்மைக்கு முன்னுதாரணமாகச் சொல்லப்பட்ட பாரி, உட்பகையற்று மக்களை வழி நடத்திய குலக் குழுத் தலைவன். எத்தகைய சுமத்தப்பட்ட கற்பனைக் குற்றச்சாட்டுகளால் சாய்க்கப் படுகிறான் என்று சொல்லிக் கொண்டு போகும் நாடகப் பிரதி, ஆதிக்கங்கள் வழக்கமாகச் சொல்லும் வடிகட்டிய பொய்கள், சாதி மேலாண்மை நாடுவோர் உருவாக்கும் போலி தர்க்கங்கள், பெண்களைப் பயன்படு பொருளாகக் காணும் சந்தை மனோபாவம் முதலான தமிழ், இந்திய வாழ்க்கையைச் சீரழித்த சகல அரசியல் பண்பாட்டுத் தடயங்களைத் தழுவிக் கட்டமைத்து அவற்றை மிகக் கடுமையாக விமர்சித்தபடி நடக்கும், மிகுந்த கலாபூர்வமாகச் செய்யப்பட்ட நாடகமாக விரிகிறது பிரளயனின் பாரி படுகளம்…
… பிரளயனின் இந்த நாடகம், பல யதார்த்தங்களை நினைவுப் படுத்துகிறது.சர்வதேச அரசியல், இந்திய இந்துத்துவ ரௌடி அரசியல், தமிழ் உணர்ச்சிப் பீறிடு அரசியல், சுற்றுப் புற அக்கறை, பெண் குறித்தான மாநுட அக்கறை என்று பல பரிமாணங்களில் நாடகம், அதன் வரம்பை மீறாமல், நாடகக் கலை அடக்கத்தோடு நிகழ்கிறது.
“தமிழ் நாடகப் பரப்பில் முக்கிய நாடகம் இது.”
-பிரபஞ்சன்