பாத்திமா மாஜிதாவின் ‘பர்தா’ காலத்துக்குப் பொருத்தமான படைப்பாக வெளிவருகிறது.உண்மையில், காலத்தைத் தீவிரமாக விசாரிக்கும் படைப்பு இது. இஸ்லாமியப் பெண்களின் இருப்பு யாரால் அல்லது எதனால் தீர்மானிக்கப் படுகிறது என்ற கேள்வி இதுவரை நீறுபூத்துக் கிடந்தது. இன்று அது திசைகள் திணறப் பற்றி எரிகிறது. அந்தத் தகிப்பை உண்மையாகச் சொல்கிறது நாவல். இஸ்லாமியப் பெண்ணுக்கான சீருடையாக பர்தாவை அல் குர் ஆன் பரிந்துரைக்கவில்லை என்கிறது ஒரு தரப்பு.. இல்லை, இஸ்லாமியப் பெண் மூடப்பட்டவளாக இருப்பதே மார்க்கம் காட்டும் நெறி என்கிறது இன்னொரு தரப்பு. இந்த இரண்டு கருத்து முனைகளுக்கு இடையில் ஊசலாடும் பெண்களின் நிலையே நாவலின் கதையாடல். பீவி, அவரது புதல்வி சுரையா, சுரையாவின் மகள் றாபியா ஆகிய மூன்று முதன்மைப் பாத்திரங்களும் பர்தாவின் உள்ளடக்கமாக ஆகிறார்கள். இல்லை, ஆக்கப்படுகிறார்கள். மத நம்பிக்கையாகவும் அரசியல் நிர்ப்பந்தமாகவும் அதிகார அடக்கு முறையாகவும் பர்தா உருமாற்றப்படுகிறது. ஏனெனில் அது ஓர் ஆடைமட்டுமல்ல. இந்த உண்மையைச் சுட்டிக் காட்டும் நாவலாசிரியர் மதத்துக்கும் அரசியலுக்கும் ஆண்மைய அதிகாரத்துக்கும் எதிரான எதிர்ப்புக் கொடியாக பர்தாவை உயர்த்துகிறார்.
- You cannot add "அடிப்படை இலத்திரனியல் | Basic Electronics" to the cart because the product is out of stock.
LKR1,200.00
2 in stock