நா.முத்துக்குமாரின் கட்டுரைகளில் வரும் மனுஷிகள், மனிதர்கள், சிறுமிகள், சிறுவர்கள், நிகழ்வுகள் அனைத்தும் நினைவுகூரல் எனும் வலுவான கயிற்றால் பிணைக்கப்பட்டு இருப்பதை உணர முடிகிறது. இந்தக் கயிற்றால் சுருக்குப்பையில் கடவுளை வைத்திருக்கும் பாட்டி யிலிருந்து நகர வீதியில் இறைபட்ட பூக்கள் வரை அவரால் முடிச்சுப்போட முடிகிறது. எல்லாருக்கும் டீ வாங்கித்தரும் மார்க்சீய தோழரிலிருந்து கல்லூரியில் பலமுறை காதலித்து, கடைசியில் ரங்கனாதன் தெருவில் பிள்ளைக்குப் பால் டப்பா வாங்க கடன் கேட்கும் குடும்பஸ்தனாகிவிட்ட நபர் வரை கோர்க்க முடிகிறது. நகரத்தில் வண்டியோட்டும் பெண்ணைத் தொடரும் நண்பரிலிருந்து கவிதைகளை வெளியிட மாடுகளை விற்கும் கவிஞன் வரை எட்ட முடிகிறது. காதலித்ததால் தற்கொலை செய்து கொண்ட பெண்ணிலிருந்து தன் மனதில் எழும் கேள்விகளை எழுத பென்ஸிலைக் கூராக்கும் சிறுமி வரை தொட முடிகிறது. இப்படி உருவாகும் பிம்பங்கள் தாம் இக்கட்டுரைகளுக்கு வலுவூட்டுகின்றன.
-அம்பை