இந்தப் புதினத்தின் பின்புலமாக தத்துவக் கட்டமைப்பும் இருக்கிறது. இருத்தலியல் அர்த்தமின்மை வாழ்க்கை முழுவதும் நிரம்பிக்கிடக்கிறது. இறந்தகாலத்திற்கும் இலட்சியக் கிராமக் கனவு உலகத்திற்கும், கடமைகளும் கவலைகளும் நிறைந்த நிகழ்காலத்துக்குமாக ஊசலாடிக் கொண்டிருக்கிறான் ஒப்லமோவ். முக்காலமும் மூடிக்கிடக்கிறது அவனது வீதி. உடலில் ஊரும் கனத்த பூச்சிகளாகின்றன கணங்கள். செயற்பாடுகள் நல்லதோ கெட்டதோ, அவை தீவிரமாகும்போது தீமைகள் மட்டுமே மிச்சப்படுகின்றன. அதீத செயற்பாடுகள்தானே உலக யுத்தங்களை உருவாக்கின; ஒருபாவமும் அறியாத எளிய மனிதர்களைச் சீரழித்தன; சித்திரவதைகள் செய்தன; சாகடித்தன! கடந்தகால ருஷ்யாவைப் பிரதிபலித்த நாவலின் நாயகன் ஒப்லமோவ், வெறும் சோம்பேறித்தனத்தின் குறியீடு மட்டுமல்ல; ஒட்டுமொத்த மனிதகுலத்தின் செயலற்றுப்போன திறமைசாலிகளின் குறியீடும் கூட. இயந்திரத்தாலும் கணிணியாலும் சூழப்பட்ட நமது வாழ்க்கைச் சூழலில் உடல் உழைப்புச் சுருங்கி, ஏன்? நாம் சிந்திக்கும் கணங்களையும்கூட செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே, 165 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட இந்தப் புதினம் இன்றைக்கும் பொருத்தமாகக் காலத்தில் நிற்பது ஒப்லமோவின் வெற்றி