தான் வாழும் உலகை, அதன் சமூக-பொருளாதார-அரசியல் ஏற்பாடுகளை நுட்பமாகப் புரிந்துகொள்வதும், அதனைப் பிறருக்குத் தெளிவாக எடுத்துச் சொல்வதும் சமூக அறிவியல் மாணவரின் கடமை. அந்த வகையில் வடக்கு- தெற்கு என்று பிரிக்கப்பட்டிருக்கும் நமது நவீன உலகை ஓர் அக்ரகாரமாகவே நான் பார்க்கிறேன்.
காலங்காலமாக அதிகார வர்க்கங்கள் தங்களின் வேற்றுப்படுத்தலுக்கும், கட்டுப்படுத்தலுக்கும் பல்வேறு காரணங்களையும் உத்திகளையும் கைக்கொண்டு வந்திருக்கின்றன. நிறவெறி, இனவெறி, மதவெறி, சாதிவெறி, காமவெறி போன்ற அதிகார வெறிக் கோட்பாடுகள் தோய்ந்த நிலப்பிரபுத்துவம், அடிமைத்தனம், காலனியாதிக்கம், அபார்தைட், ஆணாதிக்கம் உள்ளிட்ட பல்வேறு உபாயங்களுள் மிகவும் கொடூரமானது, கொடுமையானது, சூழ்ச்சிமிக்கது பார்ப்பனீய உத்தி என்பதைச் சுட்டிக்காட்ட விழைகிறேன்.